மூத்த ஊடகவியலாளர் ருசாங்கன் கோடீஸ்வரன் என்பவரது சமூகவலைத்தளப்பதிவினை அப்படியே தந்துள்ளோம்.
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் தயாளினி அவர்களின் அவலமான சாவு குறித்து பலரும் பலவிதமாகவும் எழுதித் தள்ளி சப்பித் துப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
நானும் என் பங்குக்கு கொஞ்சம் துப்பிப்போட்டுப் போக வரவில்லை.
பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில், சித்த மருத்துவத்தில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாக, சித்த மருத்துவத்துறை மேம்பாட்டுக்கான விசேட குழுவில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் தலைமையில் அம்மையாருடன் பணியாற்றிய அந்த அருமையான பொழுதுகளை மீட்டு,
அம்மாவுக்கு எனது உள்ளத்தில் ஆழத்திலிருந்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு,
நீங்கள் இல்லாமல்போய்விட்ட ஒரு தருணத்தில், புறங்கூறுவதுபோல நீங்கள் சார்ந்த ஒரு விடயத்தை எழுதுவதற்காக மன்னிப்பும் கூறிக்கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.
ஒரு வகையில் இது தனிப்பட உங்களைப் பற்றியதோ, உங்கள் பிள்ளைகள், குடும்பத்தைப் பற்றியதோ அல்ல.
இந்த சமூகத்தின் ஒரு பகுதியான நீங்கள் உங்கள் அகால மரணத்தின் மூலம் கிளறிவிட்டுச்சென்றிருக்கும் இந்தச் சமூத்துக்குள் புதையுண்டு கிடக்கும் பலரறியாத பல உண்மைகளை வெளிப்படுத்தி, எதிர்கால சந்ததியையும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் காப்பாற்றுவதற்காகவே,
ஒரு ஊடகனாக, கல்வியலாளனாக, முன்னாள் பேரவை உறு்பினராக, அக்காலத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒருவராய் இணைந்து பணியாற்றிய ஒருவனாக இதை எழுதுகிறேன்.
நித்தியத்தில் உறங்கும் உங்கள் தூக்கத்தைக் கலைப்பது என் நோக்கமல்ல.
உங்களைப்போன்று இன்னும் இங்கே துக்கத்துள் துண்டுபோயும், அவற்றைப் புரிந்துகொள்ளவும் முடியாமல், வெளிப்படுத்தவும் முடியாமல், போலி கௌரவம், தன்மானம் என்ற பெயரில் தம்மையும், தம் பிள்ளைகளையும் அநியாயமாகப் பலியிட்டுக்கொண்டிருக்கும் பலருடைய மனச்சாட்சியை உசுப்புவதற்காக உங்கள் அனுமதியுடன் இதை எழுதுகிறேன் அம்மா.
…………………………………………………..
எல்லோரும் உங்கள் பிள்ளையைக் கொலைகாரி என்கிறார்கள் அம்மா.
விலாவாரியாக உங்கள் பிள்ளை கால்களைப் பிடிக்க பிள்ளையின் காதலர் கொன்றார் என்று வாக்குமூலங்களை வாய்ப்பாடு போலப் பாடமாக்கி சட்டப்படி நீதிமன்றம் விசாரித்துக் குற்றவாளி என்று யாரையும் தீர்ப்பளிக்க முன்னதாகவே தங்கள் வித்துவங்களைக் காட்ட கண்டபடி எழுதி வருகிறார்கள்.
எனக்குத் தெரியும். உங்களுக்கு இதெல்லாம் நிச்சயம் வலிக்கும்.
பத்து மாதம் சுமந்து பெற்று பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் படிப்பீத்து ஆளாக்கும் கனவுகளைச் சுமந்து தோற்றுப்போன உங்களுக்கிருக்கும் வலி உங்களைப்போன்ற சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கக்கூடிய நேர்மையான புத்திசுவாதீனமுள்ள பெற்றோருக்கு மட்டும்தான் புரியும்.
நீங்கள் விரும்பாமலே – ஏற்றுக்கொள்ளாமலே, உங்களை மீறி உங்கள் மகள் தம் பாட்டுக்குத் தெரிவுசெய்து பதிவுத்திருமணம் செய்துகொண்ட ஒருவரை, எமது பண்பாட்டுச் சொல்லான மருமகன் என்று எப்படி விழிக்க முடியும்?
சரி, மகள் ஏன் அப்படிச் செய்தார்?
அப்போ அவர் குற்றவாளியா?
எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது?
பிறக்கும்போதே இப்படித்தான் செய்வேன், என் அம்மாவைக் கொல்வேன் என்று தீர்மானித்துக்கொண்டு கருவாகி, உருவாகி வந்த பிள்ளையா என்ன?
எங்கே தவறு நடந்தது?
……………………………………
உங்கள் திருமணத்திலும் உங்களுக்குச் சிக்கல். இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் உடன்பாடின்றி விவாகரத்துப் பெற்றுக்கொண்டு தனித் தாயாக பிள்ளைகளை வளர்த்துள்ளீர்கள்.
நல்லவரோ, கெட்டவரோ, நீங்கள் தெரிவுசெய்து, விரும்பித் திருமணம் செய்து, உடன்பட்டு இருந்து பெற்ற குழந்தைகளில் ஒன்றுதானே இப்படித் தவறியிருக்கிறது?
அவ்வாறு பெற்றுக்கொண்ட இரண்டு பிள்ளைகளுக்கும் தாய் – தந்தையராக ஒரு குடும்பச் சூழலை – அரவணைப்பை – பாதுகாப்பான வாழ்வைக் கொடுக்க முடியாமல்போனது உங்கள் இருவரினதும் தவறில்லையா?
அப்பாவின் அரவணைப்போ – கண்காணிப்போ இல்லை. ஒரு முழுநேர அர்ப்பணிப்பான புலமையாளரான உங்களின் முழுக் கவனிப்பையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் பிள்ளைக்கு இருந்திருக்காது.
அந்த இடைவெளிக்குள் நடந்திருக்கக்கூடியவைதானே இப்படிப் பூதாகரமாகி உங்கள் உயிரையும் குடித்திருக்கிறது.
உங்களை மட்டும் குற்றஞ்சொல்ல நீங்கள் தனித்தவர் இல்லையம்மா?
உங்களைப்போன்ற பல அம்மாக்கள், அப்பாக்கள் இந்தச் சமூகத்தில் எங்கும் விரவிக்கிடக்கிறார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் இப்படித்தான் அநாதரவாக, பிடிப்பதற்கு ஒரு கொடிமரம் இல்லாமல், சமூகவலைத்தளத்தைப் பற்றிப்பிடித்து அதற்குள் மூழ்கித் தொலைந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்.
மகனைக் காக்க மகளைப் பலிகொடுத்த தாய்!
……………………………..
இப்படி மட்டும்தானென்றில்லை.
உங்களைப்போன்ற ஒரு தாய், அவரும் ஒரு ஆசிரிய ஆலோசகர். அதுவும் சமயபாடம்.
தான் பெற்ற மகனைப் போதைக்குப் பறிகொடுத்துவிட்ட அவர், பாடுபட்டு அவனை மீட்டு, புனர்வாழ்வளிக்காமல் வீட்டுக்குள் வைத்திருக்க முயன்று, போதைக்கு அடிமையான கண்மண் தெரியாத அவனுக்கு தான் பெற்ற மகளையே பாலியல் பலிகொடுத்தார்.
தெரிந்தும் அதனை மறைத்து ஆண் பிள்ளையைக் காக்கிறேன் பேர்வழி என்று கெட்டித்தனம் காட்டப்போய் பெண் பிள்ளையைத் தூக்குக்கு பலிகொடுத்தார்.
அதையறிந்த அந்தப் பெண் பிள்ளையின் நண்பியொருவர் தற்செயலாக இதனை உடற்கூற்றுப் பரிசோதனை செய்ய வந்த மருத்துவருக்குக் கூறப்போய் உண்மை தெரியவந்தும், தன் “கெட்டித்தனத்தால்“ அதையும் ஒருவாறு மூடிமறைத்து வாழ்ந்து வருகிறார்.
இதுபோல் இன்னும் எத்தனையோ தாய்மார் நம் சூழலில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் காதலித்து, திருமணம் செய்து, பிள்ளை பெற்றுக்கொள்ளத்தெரிந்த அளவுக்கு பல பெற்றோருக்கு பிள்ளை வளர்ப்புத் தெரிந்திருப்பதில்லை.
சட்டச் சிக்கல்!
…………………….
18 வயதில்தான் சட்டப்படி ஒரு பெண் திருமணம் செய்ய முடியும் என்று சொல்லும் நம் இலங்கைச் சட்டம், அதே பெண்கள் 16 வயதிலேயே பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் உரித்துடையவர்கள் என்றும் சொல்லியிருப்பதால், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பல பெண் குழந்தைகளைத் தம்மால் காப்பாற்ற முடியாமல் இருக்கும் கையறு நிலையை பல வைத்தியர்கள் எனக்கு அறியத்தந்தார்கள்.
உடனடியாக அப்போது நான் இணைப்பாளராகப் பணியாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்துக்கு அதனைக் கொண்டுசென்று, சட்டத்திருத்தம் செய்யும் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கச் செய்து, அதற்கான நடவடிக்கையை உடன் எடுக்குமாறு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்திருந்தார்.
ஆனாலுமென்ன, எமது அரசியல் சீத்துவக்கேடுகளால் ஆட்சிமாற்றம் வந்துவிட அது அப்படியே கிடப்பில் போய்விட்டது.
மாணவர்களின் கல்வியறிவு மட்டத்தை மேம்படுத்தச் செய்யும் கல்வித்திட்ட மாற்றத்தைச் செய்வதற்கே இடம் தராத தேர்தல் வாக்கு வேட்டை கட்சி அரசியல் விசச் சூழலில் நல்ல காரியங்கள் எப்படி நம் நாட்டில் நடந்தேறும்?
பிள்ளை வளர்ப்புக்கலை!
…………………………………………
அது ஒருபுறம் இருக்க, பிள்ளை வளர்ப்பு தொடர்பான அறிவை – தெளிவை – பயிற்சியை பெற்றோருக்கு வழங்குவோம் என்று, அப்போதைய வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஒரு யோசனையை முன்வைத்து, அவரது பணிப்பின் பேரில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களான கல்வியமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளைக் கூட்டி பல சுற்றுக் கலந்துரையாடல்களை ஆளுநரின் தலைமையில் நடத்தினோம்.
ஆளாளுக்கு இரண்டு அமைச்சுக்களைச் சேர்ந்தவர்களும் பொறுப்புக்கழிப்புக்களையும், பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களைம் சுமத்தி காலம் கடத்தி ஒருவாறாக அந்தப் பாரிய “பொறுப்பில்“ இருந்து தப்பித்துக்கொண்டுவிட்டார்கள்.
ஆசிரிய ஆலோசகர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர், இன்னும் பல புத்திஜீவிகள் என்று சொல்லப்டுவோரின் குடும்பங்களுக்கே இந்தக் கதியென்றால்,அந்தளவு புத்தியில்லாத பெற்றோரின் குடும்பங்களின் நிலை?
எமது பண்பாடு, பாரம்பரியம், விழுமியங்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி நாம் திமிராடிய நிலையெல்லாம் தவிடுபொடியாகி காலடியில் கிடக்கிறதே?
என்ன செய்யலாம்?
………………………………
சரியான முறையில், பொறுப்பானவர்களாக, பண்பாளர்களாக, சமூக உணர்வுள்ளவர்களாக, மூத்தோரை மதிப்போராக, பயபக்தி உள்ளவர்களாக, சமய நம்பிக்கை உடையவர்களாக, கிரமமாக கோவில் வழிபாடுகளில் ஈடுபடுபவர்களாக பிள்ளைகளை வளர்ப்பதைவிட,
ஸ்கொலர்ஷிப் பாஸ் பண்ணுபவர்களாக, 9 ஏ எடுப்பவர்களாக, டொக்டர்களாக, எஞ்சினியர்களாக ஆக்கிவிடவேண்டும் என்று,
கோவில், குளம், விளையாட்டு மைதானம், பொழுதுபோக்கு, வாசிப்பு, சமூக ஈடாட்டம், நட்பு – உறவு வட்டம் ஏதுமற்ற சடங்களாக,
விடியப் பின்னேரமாக டியூட்டறி வாசல்களில் கொண்டுபோய் விட்டுக் காத்திருந்து நாம் வளர்க்கும் பிள்ளைகளின் கையில்,
நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான ஸ்மார்ட் ஃபோன்களைக் கொடுத்து, கண்காணிப்பற்ற சமூக வலைத்தள பாவனைக்கும் இடம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோரும் எழுதி வைத்துக்கொள்வோம்.
எங்களுக்கான பற்றைகள் தனங்கிளப்பில் மட்டுமல்ல, யாழ் மாவட்டம் முழுவதும், ஏன், வன்னி, கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கை எங்கும் காத்துக் கிடக்கின்றன.
விழுமியமுள்ள பிள்ளைகளாக வளர்த்தெடுப்பதில் நாம் தவறிழைத்துவிட்டு, பின்னர் ஓடிப்போனார், பிள்ளை பெற்றார், கொலை செய்தார் என்று குற்றஞ்சுமத்தி பொலிஸ்காரருக்கு வேலை வைத்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
ஒவ்வொரு பெற்றோரும், பாடசாலை ஆசிரியர்களும், பிள்ளைகள் வாழும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுகளும் இதையுணர்ந்து,
இந்த நொடியிலிருந்து எம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அன்பாக அரவணைத்து, கண்டிப்புடன் சரியான வாழ்வு வாழ வழிகாட்டுவோம்.
அது தயாளினிக்கு செய்யும் அஞ்சலி மட்டுமல்ல, நாம் அடுத்த தயாளினி ஆகி எங்கள் பிள்ளைகளையும் நடுத்தெரிவில் விடாமல் காப்பாற்றும் ஒரே வழிமுறை.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














