Home செய்திகள் காலில் சிறு காயம்! உயிர் பிரிந்தது! யாழ் இந்துவில் 3A எடுத்த 19 வயது மாணவன்...

காலில் சிறு காயம்! உயிர் பிரிந்தது! யாழ் இந்துவில் 3A எடுத்த 19 வயது மாணவன் மரணத்தின் பின்னணி!

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்…

Sepsis Awareness – செப்சிஸ் விழிப்புணர்வு
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மாணவன் லவன் அக்‌ஷயன் (வயது 19) கிருமித் தொற்றின் (Infection ) பின், அது Sepsis என்ற அபாயகரமான நோய்நிலையை அடைந்தமையினால் நேற்றைய தினம் (04.04.2026) உயிரிழந்திருக்கிறார். யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த இவர், சிகிச்சைக்காக கோமா நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் கோமா நிலையில் இருக்கும்போதே அவருடைய க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்ததாகவும், அப் பரீட்சையில், கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A தர சித்தி அடைந்து, யாழ் மாவட்டத்தில் 24-வது இடத்தையும், முழுத் தீவிலும் 265 வது இடத்தையும் லவன் பெற்றிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது. தான் பெற்ற பெறுபேறுகள் என்னவென்று தெரியாமலே கோவா நிலையில் இருந்தவாறு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது .

கிருமித் தொற்று Sepsis நிலையை அடையும் போது அது உயிராபத்துக் கட்டத்தை எட்டி விடுகிறது. லவனுக்கு காலில் ஒரு காயம் ஏற்பட்டு,அந்தக் காயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டதாகவும், அந்தக் கிருமித் தொற்று Sepsis நிலையை அடைந்ததாகவும், அவருக்கான மருத்துவத்தை வழங்குவதற்காக மருத்துவர்கள் அவரை கோமா நிலையில் வைத்திருந்து மருத்துவ உதவியை வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத மருத்துவர் ஒருவரின் தகவலின் படி லவன் வைத்தியசாலைக்கு வரும்போது காலம் சற்றுப் பிந்தி விட்டிருக்கிறது

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகநி இதே போன்று எனக்கும் ஏற்பட்ட கிருமித் தொற்று Sepsis நிலையை எட்டி, பின்னர் அது Septic Shock என்கின்ற மிக ஆபத்தான கட்டத்தை அடைந்து, எனது உறுப்புக்கள் செயலிழக்கத் தொடங்கி இருந்த நிலையில் நான் நோர்வேயில் மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டிருந்தேன். பயணத்தில் இருந்தபடியால் கிருமித்தொற்றின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து 30 மணி நேரத்துக்குப் பின்னர்தான் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அப்போது காலம் பிந்தி விட்டிருந்தது. எனது ஆபத்தான கட்டத்தை உடனடியாக அடையாளம் கண்ட மருத்துவர்கள் என்னை கோமா நிலைக்கு கொண்டு சென்று உரிய மருத்துவ உதவிகளை வழங்கினார்கள். ஐந்து நாட்கள் தான் உயிர் தப்புவேனா இல்லையா என்ற ஒரு போராட்ட நிலைமை இருந்து, அதன் பின்னர் மரணத்திற்கு மிக அருகில் சென்று மீண்டு வந்தேன். 8 நாட்கள் கோமா நிலையிலும் 80 நாட்கள் மருத்துவ மனைகளிலும் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தேன். வலுவிழந்து போன தசைநார்களையும் நரம்புகளையும் மீட்டெடுக்க 1 வருட காலம் பிடித்தது.இப்போதும் நோயின் தாக்கம் இருக்கவே செய்கிறது.

எனது Sepsis சிகிச்சை நினைவுகளை லவனின் Sepsis மரணம் தொடர்பான செய்தி மனதில் கொண்டு வந்தது. Sepsis என்பது மிகவும் ஆபத்தான, அதே நேரம் பலரும் அறியாத ஒரு நோய் நிலையாக இருப்பது குறித்து எனக்கு வந்த நோய் தொடர்பாக பல நண்பர்களுடனும் பேசும் போது என்னால் உணர முடிந்தது. இதனால் இந்த நோய்நிலை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்த நானும் முயல வேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குள்ளே இருந்து கொண்டே வந்தது. லவனின் துயரமான சாவு குறித்த செய்தியை நேற்று படித்த போது ‘Sepsis Awareness- செப்சிஸ் விழிப்புணர்வு’ என்கின்ற ஒரு Face Book பக்கத்தை உருவாக்குவது குறித்துச் சிந்திக்கிறேன். விரைவில் இதனை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன்.

கிருமித் தொற்று Sepsis நிலையை அடைவதற்கு முன்னர் உரிய கவனங்களை எடுத்து, உடன் மருத்துவ உதவியை நாடுகின்ற போது இத்தகைய இழப்புகளை தாங்கள் தவித்துக் கொள்ள முடியும். பெற்றோர்கள் நிலையில் இருந்து, உறவினர்கள் நிலையில் இருந்து, நண்பர்கள் நிலையில் இருந்து, மக்களின் நிலையில் இருந்து – இப்படி எந்த நிலையில் இரைந்து பாரத்தாலும் இத் துயரமான இழப்பு பெருவலியினைத் தருகிறது. லவனுக்கு எமது வணக்கத்தையும், அஞ்சலியையும் தெரிவித்து, பிரிவுத் துயரில் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

Sepsis குறித்து மிகவும் விழிப்பாக இருப்போம், நண்பர்களே!

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply