Home செய்திகள் யாழ்ப்பாண கம்பஸ் பெடியனும் றூம் வாடகைக்கு கொடுக்கும் அன்ரியும்!

யாழ்ப்பாண கம்பஸ் பெடியனும் றூம் வாடகைக்கு கொடுக்கும் அன்ரியும்!

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்
பல்கலைக்கழகத்தில் படிக்கும் பையன் ஒருவனுக்கு Room ஒன்று எடுத்துக் கொடுக்கும்படி தென்னிலங்கையிலுள்ள பழைய நண்பர் ஒருவர் கோரியிருந்தார்.

தெரிந்தவர்களிடம் விசாரித்து, சிவன் அம்மன் கோவில் வீதியில் ஒரு றூம் ஒன்று இருப்பதாகவும், அன்ரி ஒராளின்ட நம்பர் தந்தார்கள், கோல் பண்ண நேரில் வாருங்கள் என்றார். சரி என்று அந்த பையனையும் அழைத்துக் கொண்டு சொன்ன இடத்திற்கு சென்றோம்.

கேற்றில் நின்று பார்க்க் சட்டப்படி வீடு. பார்க்க நல்லா இருந்தது, கேற்றை திறந்து உள்ளே செல்ல அன்ரி நின்றா, வாங்கோ என்றா கிடுகிடுவென நடந்து வாசலில் செருப்பு கழட்டப் போக, தடுத்த அன்ரி, ” புறத்தால போகனும் செருப்போடு வாங்கோ” என்றா.

அன்ரி முன்னால போக, காவோலையில் சிக்குப்பட்டு பின்னால போற பன்னாடை போல பின்னால போனம். வீட்டு கட்டிடம் முடிந்து, பாத்ரூம் கடந்தும் அன்ரி சென்று கொண்டிருந்தா, என்னடா இது யுத்த காலத்தில் அன்ரி சுரங்க வீடு ஏதும் கட்டி வைச்சு இருக்காவோ என்று பல சிந்தனைகளுடன் போக, திடீரென அன்ரி நின்றுட்டா.

தம்பி இதான் ரூம் என்றா,

“மட்டை கிடுகு, விறகு பழைய பரல்கள் போட்டு வைக்க வீடுகளில் இருக்கும் அந்த கொட்டிலை தான் அன்ரி காட்டினா, தூக்கி வைக்கிற படலை. நிலம் மண். செத்த வீட்டில் பிரேதம் வைக்க யாழ்ப்பாணத்தில் பயன்படுத்திற பழைய வாங்கில் ஒன்று போட்டு இருந்தது, என்ன அதிசயம் வழக்கொழிந்து போன, எங்கேயும் தேடிகிடைக்காத குமிழ் பல்ப்பு அங்கு எரிந்துகொண்டிருந்தது. நாய் கூட அதில் படுத்தெழும்பாது இப்ப.

அந்த பையன்ட முகத்தை பார்க்க பயத்தில, கடைக்கண்ணால பார்த்தன், தொடரி படத்தில் கீர்த்தி சுரேஸ் அழுகிற போல மூஞ்சையை வைச்சு இருந்தான்.

நான் கேட்க முன்னமே அன்ரி கதையை தொடக்கினா, பன்னென்டாயிரம் வாடகை, கரண்ட் காசுக்கு ஆயிரம் தரனும், இரவு 9 க்கு முன்னம் வரனும் கேட் பூட்டிடுவன், ஆட்கள் வரக்கூடாது, Attach bathroom toilet பயன்படுத்த ஏலாது, வெளியில இருக்கிறது தான், என்று மூச்சு விடாம சொல்லிட்டு, நாலைஞ்சு பேர் வந்து பார்த்திட்டு போனாங்கள் என்றா,

அவா சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மெல்ல நடந்து வெளிக்கிட்டம், என்ன ஓகேயா? என்றா அன்ரி. பார்த்திட்டு போனவங்கள் கோல் பண்ணினவங்களோ? இல்லை பண்ணல என்றா.

இந்த றூம் வசதி கூடவா இருக்கு, நாங்கள் வசதி குறைவாக பார்க்கிறம் என்றுட்டு வெளியில் வந்து கேற்றை இழுத்து சாத்திப்போட்டு, வரவே அன்ரிக்கு புரிஞ்சு இருக்கும்.

ஒரு சின்ன குடும்பத்திற்கு வீடு பார்க்க, நம்பர் ஒன்னு கிடைத்து, கஸ்தூரியார் வீதி நாவலர் சந்திக்கு அருகில் ஒரு சின்ன வீடு இருப்பதாக சொல்லி கதைத்தால்,

“இரண்டு றூம், குசினி கோல், தலைக்கு பத்தாயிரம், வீடு என்றா நாப்பத்தைந்து வரும், பேபி என்றாலும் பத்தையிரம், சமைக்க ஏலாது, சாப்பாடு வெளியில எடுத்துத்தான் சாப்பிடனும், என்று ஒரு ஐயா கதைத்தார், true caller இல் ஏதோ principal என்று காட்டின படியால திட்டாமல் போனை வைத்திட்டன்.

யாழ்ப்பாணத்தில் தற்போது வாடகைக்கு வீடு கொடுப்பது சமச்சீரற்ற தன்மையாகவுள்ளது. சம்பந்தமே இல்லாத அதிக வாடகை, இடைத்தரகர்களின் கொமிசன் அதிகம். கிடைக்கிற எல்லாத்தையும் வாடகைக்கு கொடுத்து காசாக்கிற மனநிலை. பலாலி வீதியில் சின்ன குடும்பம் இருக்க கேட்கிற வாடகைக்கு கொழும்பு 3 கொள்ளுப்பிட்டியில் வீடு எடுத்திடலாம்.

கடைகளும் அவ்வாறு தான். இந்த இடத்தில் எவ்வளவு பிஸ்னஸ் நடக்கும், இதன் போக்கு என்ன என்று இல்லை, 10 க்கு 15 கடைக்கு 3 இலட்சம் வாடகை, 10 மாத அட்வான்ஸ் தா. Buiding. கட்டின காசை ஒரு வருசத்தில எடுத்திடனும் என்ற மனப்பாங்கு. உன்னிப்பாக அவதானித்தால், வாடகைக்கு எடுக்கும் கடைகள் பெரும்பாலும் நீண்டகாலம் இருப்பதில்லை, மூடிவிடுவார்கள், வாடகை கட்டவே உழைக்க ஏலாமல் திண்டாடுகின்றனர்.

கள்ளக்கடத்தல் பிஸனஸ் செய்தால் தான் இந்த வாடகை கட்ட கட்டுப்படியாகும்.

இதெல்லாத்துக்கும் முழுக்காரணம் இடைத்தரகர்கள், யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு சந்தியிலும் குறைஞ்சது 10 புரோக்கர்ஸ் உள்ளனர். வாடைக்கு எடுத்து கொடுத்தா, ஒரு மாத வாடகை இரண்டு தரப்பும் கொடுக்கனும் 100% கொமிசன். உரிமையாளர் எதிர்ப்பார்ப்பதைவிட கூடுதலாக யாரும் தலையில் மிளகாய் அரைத்தால் அதுக்கு வேறு கொமிசன்.

ஏன் 10 மில்லியன் ஆதனம் ஒன்று விற்றுக்கொடுத்தால் குறைஞ்சது 1 மில்லியன் கொமிசன். வாங்கிறவர்களிட்டயும் கொமிசன்.

டொக்டர், வழக்கறிஞர், பிஸ்னஸ்காரர்களை விட அதிகம் உழைப்பவர்கள் இந்த புரோக்கர்கள் தான் என்பது புள்ளிவிபர தகவல்,

ஆதன கைமாற்றலில் யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் மாபியா பிஸ்னஸ் நடக்கின்றது, அது வரி விதிப்புக்குள் அகப்படாத பண இழப்பு இல்லாத வருமானம். கஸ்ரப்பட்டு உழைப்பவன் ஆதனங்கள் பக்கம் தலைவைத்து படுக்காத நாட்கள் நெருங்கிக்கொண்டு இருக்கின்றது.
-சுரேன்

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply