இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்…
இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்…
ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற “எதிர்கால சூனியம்” இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே…
இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 ‘வேலையில்லாப் பட்டதாரிகளை’ உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்!
கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச் சொல்லித்தான் ஆகோணும். எந்த ஸ்கில்லும் (Skill) இல்லாம, வெறுமனே மனப்பாடம் பண்ணி வாங்குன இந்தப் பட்டத்தை வைச்சுக்கொண்டு இனி என்னத்தைச் செய்யப் போறாங்கள்? கொஞ்சம் கமண்டில சொல்லுங்கோ போட்டு பொளப்பம்…
#வரலாற்றுப்_பாடமும், #மாறாத_எங்கட_மோட்டுத்தனமும்!
வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1970களில் வடக்கில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியதற்கும், 1971 மற்றும் 1989களில் தெற்கில் ஜே.வி.பி (JVP) இளைஞர்கள் கிளர்ச்சி செய்ததற்கும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று — இந்த வேலையில்லாப் பட்டதாரிப் பிரச்சனைதான்! வேணும் எண்டால் நிறைய தேடிப்படியுங்கோ ஓலப்பேயன்களே….!!
பிரிட்டிஷ்காரன் விட்டுப்போன கிளார்க் (Clerk) வேலைக்கான கல்விமுறையை மாத்தாம, “பட்டம் படிச்சா அரச வேலை கிடைக்கும்” எண்ட மாயையில ஒரு சமூகத்தையே பலிகொடுத்ததுதான் அரசியல்வாதிகள் செஞ்ச மிகப் பெரிய துரோகம். கனவு அரசியல் பிச்சைக்காரர்களும் அதையேதான் செய்துகொண்டும் இருக்கிறார்கள்….
50 வருசம் கடந்தும் நாங்க மாறினபாடா இல்ல! அதே மோட்டுத்தனமான முட்டுக்கொடுத்தல். “எங்கட கல்விதான் உலகத்திலயே சிறந்த கல்வி” எண்டு மார்தட்டிக்கொண்டு திரியவேண்டியது. ஆனா, படிக்கிற படிப்புக்கும் வெளியில இருக்கிற வேலைவாய்ப்புக்கும் சம்மந்தமே இருக்காது. இதை கேட்டால் கதைச்சால் என்னோட மல்லுக்கட்டுவாங்க…. நீ என்ன எஞ்சினியரோ எண்டு கேட்பானுகள், காமடிப்புன்னகைகள்… (எனக்கே தெரியாது நான் எஞ்சினியரா எண்டது வேற கதை)
#ஏசி_ரூம்_மோகமும், #அந்தஸ்துப்_பம்மாத்தும்.
பட்டம் படிச்சா உடனே சுழல் கதிரையும், ஏ/சி (A/C) ரூமும் வேணும் எண்டு எதிர்பார்க்கிற மனநிலை. ஒரு அரச வேலைக்காக 5 வருசமோ 10 வருசமோ காத்திருந்து, மனித வளத்தை வீணாக்குகிற ஒரே சமூகம் நாமாகத்தான் இருப்போம். கடும் படிச்ச மோடுகள்…
#ஆண்பிள்ளைகளின் அவலம்.
கேம்பஸ் முடிஞ்சவுடனே கல்யாணத்தைப் பேசலாம் எண்டு பெத்தவங்கள் நினைப்பாங்கள். ஆனா சமூகம் அவனுக்கு “வேலையில்லாப் பட்டதாரி” எண்டுற பட்டத்தைத்தான் சீதனமா குடுக்கும்.
யாழ்ப்பாணத்தில ஒரு மின்குமிழை (Bulb) மாத்தோணும் எண்டா 2,000 ரூவா சம்பளமும், வடிவான மதியச் சாப்பாடும் குடுக்க ஆக்கள் ரெடி. ஆனா, இந்தப் பட்டம் படிச்ச ‘அறிவாளி’ வருவாரா? வரமாட்டார்! ஏனெண்டா அது “கௌரவக் குறைச்சல்”. வீட்டை இருந்து அப்பா அம்மாட பென்சன் காசில சாப்பிட்டாலும் சாப்பிடுவானே தவிர, இறங்கி வேலை செய்ய மாட்டான்.
#பெண்பிள்ளைகளின் நாடகம்: பொம்பிளைப் பிள்ளை எண்டா… எப்படியாவது லண்டன், கனடா, சுவிஸ் எண்டு ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பிடிச்சு கட்டிக் குடுத்திடலாம் எண்ட நப்பாசை. அங்க போய் இந்தம்மா என்ன வேலை செய்யும் எண்டு நினைக்கிறியள்? ஊரில செய்யக் கூச்சப்பட்ட அதே சின்னச் சின்ன வேலைகளைக் குளிருக்குள்ள கிடந்து கஸ்டப்பட்டுச் செய்யும். நாகரீகத்துக்காக சின்ன சின்ன வேலை எண்டானான் (வீட்டில கக்கூஸ் கழுவவே வாரத்துக்கு ஒருக்கா யாரையும் சம்பளத்துக்கு கூப்பிடுறவையள்) என்ன ஒரு பம்மாத்து கண்டியளோ!
#கலைப்பிரிவும், #சித்த_மருத்துவமும். யாருடைய தவறு?
சரி, அரச வேலை வேண்டாம், பிரைவேட் கம்பனிக்குப் (Private Sector) போவம் எண்டா… அங்க போய் சைவ சித்தாந்தமும், வரலாறும் படிச்சதை வைச்சு என்னத்தைச் செய்ய? ஒபீசில (Office) வாற பொங்கல், தீபாவளிக்குப் பாட்டுப் பாடி கலைநயத்தைக் கூட்டலாமே தவிர, வேற என்ன ஸ்கில்லோட வெளியில வந்திருக்கிறாங்கள்?
இன்னொரு பக்கம் சித்த மருத்துவம். படிச்சு முடிச்சு 37 வயசாகுது, இன்னும் வேலை இல்ல. பிழையான கோர்ஸை (Course) நாலு அஞ்சு வருசம் படிச்சு தங்களின்ட வாழ்க்கையை வீணாக்கச் சொன்னது யார்? எந்த அழுத்தத்துக்காக இந்த மாணவர்களை உள்ளே எடுத்தாங்கள்? எனது நண்பி சித்தமருத்துவ பட்டதாரி இப்ப 38 வயசில கோறணமேந்து வேலை கிடைச்சிருக்கு ஆனால் வேலை சித்தமருத்துவர் இல்லை. 30-35 வயசுக்கு பிறகு வேலைக்கு புதிதாக இணைபவர்களிடம் இருந்து என்ன வேலை வாங்கேலும் எண்டு நினைக்கிறியள்??
வேற வழி தெரியாம, அரசியல்வாதிகளின்ட வாசல் படியில போய் ஏறி இறங்கி, கடைசியில “அரச வேலையை எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவர்கள் சங்கம்” எண்டு ஒரு போர்ட்டைத் (Board) தூக்கிக்கொண்டு நிக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு. அரசியல்வாதிக்கு இதுதான் வேணும். அவனுக்கு இது ஒரு நிரந்தர வாக்கு வங்கி!
பெற்றோருக்கும் இளைய சமுதாயத்துக்கும் ஒரு வார்த்தை…
பெற்றோர்களே. தயவுசெய்து “என்ட பிள்ளை கேம்பஸ் போகுது” எண்ட வெட்டிப் பந்தாவுக்காக அவங்களை பலிகடா ஆக்காதேங்கோ. காலம் மாறிட்டுது. அரச வேலை எண்டது இனிமேல் கானல் நீர்தான். உங்கட பிள்ளைக்கு வேலைவாய்ப்பைத் தரக்கூடிய திறன்களை (Skills) வளர்க்க உதவுங்கோ. அதுக்கு செலவு செய்யுங்கோ. சாமத்தியவீடு, கீபேத்டே, கலியானவீடு எண்டு வெட்டிப்பந்தா செலவுகளை குறைக்கலாம்.
இளைய சமுதாயமே. சுருட்டின பேப்பரை வைச்சுக்கொண்டு அரசியல்வாதிகளின்ட வாசல்ல நிக்கிறதை விடுங்கோ. உங்கட கோர்ஸில (Course) வேலை இல்லை எண்டா, உலகத்துக்கு என்ன தேவையோ அதைப் படிங்கோ.
தொழில்நுட்பம், மொழியறிவு, செய்முறைத் திறன் (Practical skills) இத வளர்க்காம, “பட்டம் படிச்சிருக்கன்” எண்டு சொல்லிக்கொண்டு திரிஞ்சா, காலம் உங்களை இரக்கமில்லாம ஓரங்கட்டிப் போடும்! Practical skills அ வைச்சு வேலை எடுங்கோ சம்பாதீங்கோ, அதைவைச்சு எம் கலைகளை உலகறிய செய்யுங்கோ பணம் தானா உங்களை தேடிவரும்…..
இந்த யதார்த்தத்தை உங்களின் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிர்ந்து, அவர்கள் மத்தியில் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்படுத்துங்கோ, போட்டு பொளந்து தள்ளுங்கோ…. தேடல் உள்ள சமூகமே வெல்லும்.
அல்லது, பட்டதாரிகள் மாற்று வழிகளில் எவ்வாறு தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த நவீன வேலைவாய்ப்புத் திறன்கள் (Modern Skillsets) பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தேடுங்கோ எனக்கும் சொல்லுங்கோ கேப்பம். எனக்கு ஓலப்பேயர்களின் சமூகம் தேவையே இல்லை…..
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.













