யாழ் நகர்ப்பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய் பெறுமதியான 8 பரப்பு காணியை தமது பிள்ளைகளுக்கு பங்கீடு செய்வதில் ஏற்பட்ட தகராறு முற்றி தனது மனைவியை விவாகரத்துச் செய்ய முற்பட்டுள்ளார் 69 வயதான தர்மராசா. தர்மராசாவுக்கு 2 ஆண், 3 பெண் பிள்ளைகளுமாக 5 பிள்ளைகள். அனைவரும் திருமணம் முடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுடன் வாழ்கின்றாா்கள். தா்மராசாவும் அவரது மனைவியும் கடந்த 16 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்கள். அவா்களை கனடாவுக்கு அழைத்தது அவர்களது மூத்த ஆண் பிள்ளை. தர்மராசா யாழில் காப்புறுதி மற்றும் நிதிநிறுவனங்களின் முக்கியஸ்தராக வாழ்ந்து வந்தவர். அவருக்கு யாழ் நகர்ப்பகுதியில் வைத்தியசாலை வீதி உள்ளடங்கலாக இன்னொரு சிறு வீதியுடன் சேர்த்து 35 கோடி ரூபா பெறுமதியான காணியும் கட்டடமும் உள்ளது. அது அவருக்கு தந்தை வழி வந்த முதுசமாகும். முன்னர் அக் காணியில் விடுதலைப்புலிகள் தங்கியிருந்து பின்னர் படையினாரால் கைப்பற்றப்பட்டு சில வருடங்களுக்கு முன்னரே அந்தக் காணி விடுவிக்கப்பட்டிருந்தது.
அக் காணியை தனது பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்க முற்பட்ட போது அவுஸ்ரேலியாவில் உள்ள அவரது மகளும் கனடாவில் உள்ள மற்றொரு மகளும் பங்கு பிரிக்கும் விடயத்தில் தமது தாயுடன் சேர்ந்து நின்று குழப்பி வந்துள்ளார்கள். தர்மராசா தம்பதிகளின் 2 வது மகன் 19 வயதிலேயே காதலித்து திருமணம் செய்தவர். தற்போது மனைவியுடன் கொழும்பில் வசித்து வருகின்றார். அவருக்கு 3 பெண் பிள்ளைகள். அவர் காதலித்து திருமணம் முடித்த பின் அவரது மனைவி தர்மராசா மற்றும் தாயாரை யாழ்ப்பாணத்தில் வைத்து தரக்குறைவாக நடாத்தியுள்ளார். 2008ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்த காலத்தில் படையினா் மற்றும் ஒட்டுக்குழுக்களுடன் நெருங்கிப் பழகி வந்த 2 வது மகன் அந் நேரத்தில் மனைவியுடன் சேர்ந்த தாயாரின் தாலிக்கொடி மற்றும் நகைகளைப் பறித்துச் சென்றதாகத் தெரியவருகின்றது.
இப் பின்னணியிலேயே குறித்த காணிப் பங்கீட்டு விடயத்தில் 2 வது மகனுக்கு காணி பிரித்துக் கொடுக்க வேண்டாம் எனவும் தற்போதும் 2 வது மகன் தரங்கெட்ட நிலையில் வாழ்ந்து வருவதாகவும் காணி பிரித்துக் கொடுத்தால் அவற்றை விற்றுவிடுவான் எனவும் கூறி அவனுக்கு காணி பிரித்துக் கொடுப்பதற்கு தாயாரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார். ஆனாலும் 2வது மகனின் மூத்த பெண்பிள்ளை பிள்ளை தற்போது பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதைக் காரணம் காட்டி 2 வது மகனுக்கு காணியை எழுத முற்பட்ட போதும் தாயார் மற்றும் மகள்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தர்மராசாவுக்கு தனது 2 மகள்களின் கணவர்கள் மீதும் கடும் வெறுப்பு இருந்து வந்துள்ளதுடன் அவர்களின் துாண்டுதலின் பேரிலேயே தனது 2 மகள்களும் காணி எழுதுவதற்கு குழப்பம் செய்து வருகின்றார்கள் என கருதியுள்ளார்.
அதன் காரணமாக தர்மராசா மகள்களின் பேச்சைப் பொருட்படுத்தாது யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து சட்டத்தரணி ஒருவர் மூலமாக காணி அளவீடு செய்து தனது 5 பிள்ளைகளுக்கும் அக் காணியை பகிர்ந்து கொடுப்பதற்கு ஆயத்தப்படுத்தி உறுதி எழுதியுள்ளார். தன்னுடன் யாழ்ப்பாணம் வந்து தங்கி நின்ற மனைவியை குறித்த உறுதியில் கையெழுத்து வைக்க கூறிய போது மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந் நிலையில் சட்டத்தரணி முன்பாகவே மனைவியை தாக்கியுள்ளார் தர்மராசா. இதனையறிந்து அவுஸ்ரேலியாவிலிருந்து வந்த மகள் தர்மராசாவுடன் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மனைவியைத் தாக்கியதற்காக பொலிசாரிடம் முறையிடப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். இதனையடுத்து கடும் கோபம் கொண்ட தர்மராசா தனது மகளையும் தாக்கியதாகத் தெரியவருகின்றது. தர்மராசாவின் தாக்குதலால் தலை மற்றும் மூட்டுப் பகுதிகளில் காயமடைந்து சிகிச்சை பெற்ற பின் பொலிசாரிடம் தாயும் மகளுமாக முறையிட்டுள்ளார்கள். இதன் பின் தர்மராசா தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் உள்ள சிறைக் கூண்டுக்குள் அடைத்துள்ளனர்.
தர்மராசா சிறைக் கூண்டுக்குள் உள்ளதை அறிந்த அவருக்கு காணி எழுத முற்பட்ட சட்டதரணி உடனடியாக பொலிஸ் நிலையம் சென்றது அவரை பொலிஸ் பிணையில் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
தற்போது காணிப்பிரச்சனை பெரும் விஸ்வரூபம் எடுத்து தர்மராசாவின் 44 வருட தாம்பத்திய வாழ்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. தற்போது தனது மனைவியை தர்மராசா விவாகரத்து செய்யவுள்ளதாக சட்டத்தரணி மூலம் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.














