Home செய்திகள் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவான ஐஸ் போதைப்பொருள் மீட்பு.!

இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.4.50 கோடி மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் எஸ் பி பட்டினம் அருகே வைத்து தனியார் பேருந்தில் இருந்து இன்று செவ்வாய் (18) காலை சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான தனுஷ்கோடி, மரைக்காயர் பட்டினம், வேதாளை, களிமண்குண்டு, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள், கடல் அட்டை, செருப்பு, பீடி இலை பண்டல்கள், பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை சமீப காலமாக அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக இந்திய ,இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடற்கரை ஓரங்களில் கடத்தல் சம்பவங்களை மரைன் போலீசார், சுங்கத்துறை, உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வரும் நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி போதை பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக ஐஸ் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாகவும், ஐஸ் போதைப்பொருள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் தனியார் பேருந்தில் கொண்டு வர இருப்பதாகவும் ராமநாதபுரம் சுங்கத்துறை துணை ஆணையருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையான மீமிசல், எஸ் .பி பட்டினம்,தொண்டி, மோர் பண்ணை, தேவிபட்டினம், காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (18) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றை எஸ் பி பட்டினம் அருகே வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேருந்துக்குள் சோதனை செய்தபோது பயணிகள் அமரும் இருக்கைக்கு கீழே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பேக் ஒன்றை எடுத்து சோதனை செய்தபோது அதில் ஐஸ் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளிடம் அந்த பை குறித்து விசாரித்த போது யாரும் அந்த பைக்கு உரிமை கோராததால் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டு ஐஸ் போதைப்பொருளை ராமநாதபுரம் சுங்கத்தை அலுவலகத்திற்கு எடுத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ஐஸ் போதை பொருளை எடையிட்டு பார்த்த போது அதில் 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்துள்ளது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.4.50 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருவதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here