Home செய்திகள் 2.5 மில்லியன் டொலரை ஹக்கர்களிடம் பறிகொடுத்த காரணத்தால் உயிரிழந்த அரசஅதிகாரியின் மறுபக்கம் இதுதான்!

2.5 மில்லியன் டொலரை ஹக்கர்களிடம் பறிகொடுத்த காரணத்தால் உயிரிழந்த அரசஅதிகாரியின் மறுபக்கம் இதுதான்!

← Back

Thank you for your response. ✨

.5 மில்லியன் ஹெக்கிங் விவகாரம் காரணமாக உயிரிழந்த பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையாண்ட போதும் சீமெந்து பூசாத சுவரை கொண்ட வீட்டை சொந்தமாக கொண்டு வாழ்ந்து வந்த ரங்க நிஷாந்த அவர்களுக்காக நான் மொழிபெயர்ப்பு செய்து எழுதியது. இலங்கையின் அரச பணியில் நேர்மையாக பணியாற்றி வரும் பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு இது சமர்ப்பணம்.

“வாருங்கள்… அவர்மீது முதல் கல்லை எறியுங்கள்!”
– ஒரு வேதனையான வேண்டுகோள்

நடக்கக் கூடாத ஒன்று நிகழ்ந்து முடிந்துவிட்டது. ரங்க அய்யா இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார். அவர் மறைந்து ஒரு நாள் கடந்திருந்தாலும், உண்மையில் அவர் யார் என்பதை அறியாத பல தரப்பினரால் அவர் மீண்டும் மீண்டும் “கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்ற வேதனையோடு இந்தக் குறிப்பை எழுதுகிறேன்.

அன்புடையவர்களே, தயவு செய்து இங்கு நின்றுவிடுங்கள். நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் அறியாதவர்களாக இருந்தால், அவரைப் பற்றி தீர்ப்பு வழங்குவதிலிருந்து விலகுங்கள். குறைந்தபட்சம் இப்போதாவது அன்புத் தோழர் ரங்க அய்யாவை அமைதியாக உறங்க அனுமதியுங்கள்.

ரங்க நிஷாந்த ,பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் சீனப் பிரிவில் என்னுடன் பணியாற்றிய நெருங்கிய நண்பர் ஆவார். தனது பணிக்காக எந்தவித சுயநலமும் இன்றி செயலாற்றி அனைவருக்கும் வழிகாட்டியவர்; எந்த தயக்கமும் இன்றி அனைவருக்கும் உதவி செய்தவர். அவருக்கு எந்த அரசியல் நோக்கும் இருந்ததில்லை. மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன் – அவர் எந்த வகையிலும் அரசியலில் ஈடுபட்டவர் அல்ல. எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவரும் அல்ல. அவர் பணியாற்றியது இலங்கை அரசுக்காக மட்டுமே. பல அரசுகள் ஆட்சியில் இருந்த காலகட்டங்களிலும் எந்த சூழலிலும் மாறாத கொள்கையோடு தனது கடமைகளை நிறைவேற்றிய, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த ஒரு நேர்மையான நிர்வாக அதிகாரியாக தனது கடமைகளை செவ்வனே செய்து வந்தவர். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவராகவும், தென் கொரியாவில் முதுநிலைப் பட்டம் பெற்ற பின்னர் அர்ப்பணிப்புடன் அரசுப் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

ரங்க அய்யா ஒரு சாதாரண அரசுப் பணியாளர் அல்லர். எனது பணிக்காலத்தில் நான் கண்ட மிகச் சிறந்த திறமையுடைய, அரிதாகக் காணப்படும் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளில் ஒருவராக இருந்தார். அவரை அறியாத சில சமூக ஊடக எழுத்தாளர்களின் கருத்துப்படி, அவர் தற்போது ஆட்சியில் உள்ளவர்களால் நியமிக்கப்பட்ட, “ஹெலிகாப்டர் அரசியல் நியமனம்” பெற்ற ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். அது முற்றிலும் தவறு. அவர் பதினெட்டு ஆண்டுகள் சேவைக்காலம் கொண்டவர்; பல அரசுகள் மாறினாலும் மாற்றமின்றி பொறுப்புடன் பணியாற்றிய நேர்மையான அதிகாரி. அதிலும் பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் அவர் நிதி அமைச்சுக்காகவே பணியாற்றியவர். இன்று மக்கள் அனுபவிக்கும் பல வெளிநாட்டு திட்டங்களுக்கான அமைச்சரவை ஆவணங்கள், ஆய்வறிக்கைகளை உருவாக்குவதில் அவரது உழைப்பின் தடம் உள்ளது. கோடிக்கணக்கான டொலர் மதிப்புள்ள திட்ட ஒப்பந்தங்களை ஆய்வு செய்த அனுபவமுடையவராக இருந்தும், பணிநேரம் முடிந்ததும் கிடைக்கும் ரயிலில் வீட்டிற்கு திரும்பிச் செல்வதையே வாழ்க்கை முறையாகக் கொண்ட எளிமையான மனிதர். மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மீண்டும் பணிக்காக வருபவர்.

அவருக்கு இருந்த ஒரே பலவீனம் – தனது கடமையில் சிறிய தவறு நடந்தாலும் அதனை மிகுந்த மன வருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தும் வகையில் எடுத்து கொள்ளும் தன்மை.அதை திருத்துவதற்காக மீண்டும் நிகழாமல் இருக்க அளவுக்கு மீறிய முயற்சிகளை மேற்கொள்வார். அப்போது அது எனக்கு விசேஷமாகத் தோன்றவில்லை. ஆனால் இன்று புரிகிறது – தனது கடமையின்மீது இவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கும் அதிகாரிகள் அரச பணியில் மிகவும் அரிது. சில பலயீனங்கள் தவறுகள் பின்னர் திருத்த இயலாதவையாக மாறிவிடும் என்பதும் நிதர்சனமே.

இறுதியில், அதே பண்பு அவருடைய வாழ்க்கையின் இறுதி முடிவை தீர்மானித்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அவரின் மேற்பார்வையில் இருந்த ஒரு செயல்முறையின் கீழ் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு கடுமையான கவனயீம் அல்லது தவறு – நாட்டிற்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய தவறு – அதற்கான பொறுப்பை ஏற்று சாமுராய் போல் அவர் தனது உயிரை அர்ப்பணித்து தனது மனசாட்சியின் தீர்ப்பை ஏற்றிருக்கலாம். நான் அறிந்த ரங்க அய்யாவின் பொறுப்புணர்வு அதுவே. ஒருநாள் விசாரணைகள் வேறுபட்ட உண்மையை வெளிக்கொணர்ந்தால் அது வேறு விஷயம். ஆனால் நான் அறிந்தவரை, மனவேதனையை தாங்க முடியாமல் தனது வாழ்க்கையை முடிக்கத் தீர்மானித்தவர் அவர் என்றே கருதுகிறேன். ஒரு வேளை நான் பிழையாக கூட இருக்கலாம் விசாரணைகள் அனைத்து விடயங்களையும் வெளிக்கொண்டு வரும்.

அரசுப் பணியில் ஊழல் புரிபவர்கள் இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், தவறை நினைத்தே செய்யாத, மிகுந்த மனச்சாட்சியுள்ள அதிகாரிகள் சிறிய குற்றச்சாட்டையும் தாங்க முடியாமல் போகிறார்கள். உடனே அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்; விசாரணைகள் தொடங்கப்படும்; ஊடகங்கள் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாட்டின்படி பல்வேறு விளக்கங்களை வழங்கும். அனைத்து தலைப்புச் செய்திகள் அவரையே மையமாகக் கொண்டிருந்தன. பின்னர் அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டாலும், அந்தச் செய்தி முன்னைய அளவிலான கவனத்தை ஈர்க்காது அவர்கள் மீதான பழிச் சொல் துரதிர்ஷ்டவசமாக நிலைத்து விடுகிறது இது இந்த நாட்டில் நிரந்தர சாபமாக இருக்கிறது.அதன் பின், யாரேனும் உயிரை மாய்த்துக் கொண்டால், சில ஊடகங்கள் குடும்பத்தின் துயரத்தையே ஒரு “செய்தி”யாக மாற்றிக் கொள்ளும். அந்த வேதனையை பலர் ரசிப்பதற்கான பொருளாக மாற்றி தங்கள் வர்த்தகத்தை அதிகரிக்கும் கருவியாக பாவிக்கும்.

ரங்க அய்யாவின் மரணத்திலும் இதே நிலைதான் உருவாகியுள்ளது. அரசியல் தரப்புகள் இரண்டும் அவருடைய மரணத்தை தங்களுக்கான ஆதாயமாக பயன்படுத்த முயலும் ஒரு துயரமான நிலையை நாம் காண்கிறோம். ஒரு விஷயம் மட்டும் உறுதி – தனது மரணத்திற்கு பின்னர் இவ்வாறு தனது பெயர் பயன்படுத்தப்படும் என்று அவர் அறிந்திருந்தால், அவர் இவ்வாறு முடிவெடுத்திருக்க மாட்டார். அவர் அந்த அளவுக்கு ஒழுக்கநெறி மிக்க மனிதர்.

அவரது பணியில் ஏதேனும் தவறு நடந்ததா என்பதை நான் உறுதியாக அறியவில்லை. ஆனால் அப்படியானால், வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்யாதவர்கள் என தங்களை நினைக்கும் உங்களிடம் நான் கூறுவது ஒன்று மட்டுமே இயேசு நாதர் கூறியது போல்– “வாருங்கள்… ரங்க நிஷாந்த மீது முதல் கல்லை எறியுங்கள்.”

ரங்க அய்யா தனது குடும்பத்தினரையும், குறிப்பாக தனது மகள்களையும் அளவில்லா அன்புடன் நேசித்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் எதிர்காலம் குறித்து அவர் கொண்டிருந்த கனவுகளை என்னுடன் பகிர்ந்துள்ளார். அந்தக் கனவுகள் நனவாகும் தருவாயில் இருந்தபோது, அவர் இவ்வுலகை விட்டு நீங்கியுள்ளார். அதற்குப் பின்னால் அவருக்கே உரிய ஒரு ஆழமான காரணம் இருந்திருக்கலாம். நான் அறிந்த ரங்க அய்யாவின் எந்த முடிவும் காரணமின்றி இருக்காது. அவர் நினைத்தது எதுவோ, அது அவருக்குச் சிறப்பாக நிறைவேறட்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.

அன்புடையவர்களே, மீண்டும் தாழ்மையுடன் வேண்டுகிறேன் – குறைந்தபட்சம் இப்போதாவது ரங்க நிஷாந்த அமைதியாக நிம்மதியாக உறங்க அனுமதியுங்கள்.

சகோதரா, உங்கள் நிரந்தர பயணம் இனிய பயணமாக அமையட்டும்.

— அமில இந்ரநாத் நந்தசிரி

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply