Home செய்திகள் புத்தளத்தில் கோர விபத்து: இருவர் பரிதாப பலி; 15க்கும் அதிகமானோர் காயம்!

புத்தளத்தில் கோர விபத்து: இருவர் பரிதாப பலி; 15க்கும் அதிகமானோர் காயம்!

புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியில் உள்ள சாலியாவெவ, 19ஆம் மைல் கல் பலுகஸ்ஸேகம பகுதியில், வியாழக்கிழமை (22) மாலை சுமார் 6.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னாரை நோக்கிப் பயணம் செய்த அதி சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகச் சாலியாவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் சாலியாவெவ பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென வீதியின் குறுக்கே பயணிக்க முற்பட்டுள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காகப் பஸ்ஸின் சாரதி எடுத்த முயற்சியின் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த பஸ் வீதியோரத்தில் உள்ள பாலமொன்றில் மோதி, வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 200 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்து இடம்பெற்றபோது, குறித்த சொகுசு பஸ்ஸில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தின் பின்னர் சாலியாவெவ பொலிஸாருடன் இணைந்து அப்பகுதி மக்களும் காயமடைந்தவர்களை மீட்பதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் தள வைத்தியசாலை, சாலியாவெவ வைத்தியசாலை மற்றும் நொச்சியாகம வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், சொகுசு பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த சொகுசு பஸ் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சொகுசு பஸ் அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதியதில், அம்மின் கம்பம் பலத்த சேதத்திற்குள்ளானதால் அப்பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது.

இக்கோர விபத்துச் சம்பவம் தொடர்பில் சாலியாவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இணையத்தளம் AI தொழில்நுட்பத்தின் துணையுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை அன்பான வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

Leave a Reply